புதுடில்லி: ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கம்யூனிஸ்ட்களை கடுமையாக தாக்கி, “இந்த நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்கள் கோழைகள்” எனக் கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்த பரிவர்த்தனைகள் மற்றும் தீர்வை (Payment and Settlement Systems) சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.

மசோதா மீது பேசிய சிபிஎம் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பிரேசிலில் நடந்ததை ஒப்பிட்டு குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பு இலவச பொதுச் சொத்தாக உருவாக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியதற்கு எதிராக தற்போதைய நடைமுறை இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட நேரத்தை மீறி பேசியதால் அவைத்தலைவர் அவரது உரையை நிறுத்தியதாகவும், இதனை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் பேசிய நிர்மலா சீதாராமன், தனது பதிலைக் கேட்க விரும்பினால் ஜான் பிரிட்டாஸ் அவையில் இருக்கலாம் என கூறினார். மற்றவர்கள் பேசுவதை உண்மையல்ல என சாடுவது, உண்மைகளை மாற்றுவது, ஆனால் தங்களுக்குப் பேசும் உரிமை மட்டும் வேண்டும் என நிபந்தனை விதிப்பது கம்யூனிஸ்ட்களின் பாணி என அவர் விமர்சித்தார். வரிக்கு வரி பதில் அளித்தால் அதை எதிர்கொள்ள அவர்களுக்கு தைரியம் இல்லை என்றும், ஜான் பிரிட்டாஸ் அவையில் மட்டுமல்ல நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.