புதுடில்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் தரப்பு) சுப்ரியா சுலே தலைமையில் எம்பிக்கள் குழு, பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்து பேசினர்.

எம்பிக்கள் கூறியதன்படி, மகாராஷ்டிராவில் அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளம், வறட்சி நிலை ஆகியவற்றை முன்வைத்து பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட மத்திய அரசு உதவியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மஹாத்மா ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே மற்றும் அன்னா பாவு சதே ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

சந்திப்புக்குப் பிறகு எம்பி நிலேஷ் தன்யன்தேவ் லங்கே கூறுகையில், அதிக மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், அதனால் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அவசியம் என்றும் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த சந்திப்புக்கு அரசியல் பின்னணி இருப்பதாகவும் வட்டாரங்களில் பேசப்படுகிறது. லோக்சபா தொகுதி மறு வரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படலாம் என்ற சூழலில், சரத் பவார் தரப்பின் 8 எம்பிக்களின் ஆதரவை பாஜ கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முடிவு ஓரிரு நாட்களில் தெளிவாகும் என கூறப்படுகிறது.