தமிழகத்தில் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா (நவோதயா) பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், மத்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளை மாநில அரசு மீது திணிக்க முடியாது எனக் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இதற்கு முன், அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

பிரமாண பத்திரத்தில், கல்வி அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் உள்ளதால் கொள்கை வகுப்பதற்கும் சட்டம் இயற்றுவதற்கும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தமிழ் கற்றல் சட்டம்’ மூலம் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மாநிலச் சட்டங்களுக்கு முரணாக இருக்கும் மத்திய நிர்வாகக் கொள்கைகளை அமல்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளது.

மேலும், நவோதயா பள்ளிகளை அமைக்க மாநிலத்தை கட்டாயப்படுத்தவோ, தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வற்புறுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என வலியுறுத்தியுள்ளது. நிலக் கொள்கை, நில மேலாண்மை, உரிமை மாற்றம் போன்றவை மாநிலத்தின் விருப்ப உரிமைக்குட்பட்டவை என்பதால், மாவட்டந்தோறும் நிலம் அடையாளம் காண உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அதே நேரத்தில், ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,109.90 கோடி நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், அது விடுவிக்கப்பட்டால் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தி மாணவர்கள் கூடுதல் பயன் பெற முடியும் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.