தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த 65 சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் பதவியேற்றபோது, மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்றே இந்த அதிரடிப் படைகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
உள்துறை செயலர் மணிவாசன் வெளியிட்ட அரசாணையில், இந்த படைகள் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அளவில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும்.
அமைப்புத் திட்டப்படி, மாவட்டங்களில் மொத்தம் 37 சிறப்பு படைகள் அமைக்கப்படும்; சென்னையில் 12 சிறப்பு படைகள் செயல்படும். மேலும் ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா இரண்டு சிறப்பு படைகள் அமைக்கப்படுகின்றன.
பணியிடங்களாக 65 இன்ஸ்பெக்டர்கள், 260 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 1,300 காவலர்கள் என புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறப்பு படையிலும் ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20 காவலர்கள் இடம்பெறுவர்; தலைமையகம் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் இயங்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





