பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்ற தனித் தீர்மானம், தமிழக சட்டசபையில் நேற்று அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய், தமிழ் என்பது மொழி மட்டுமல்ல; உணர்வு, பண்பாடு, சிந்தனை மற்றும் வரலாற்றின் அடையாளம் என்றும், தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து அதன் முக்கியச் சின்னம் என்றும் பேசினார்.

1970 முதல் தமிழகத்தின் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபாக இருந்து வருவதாகவும், அந்த நடைமுறையைப் பின்பற்றுவதில் அரசு சமரசம் செய்யாது என்றும் அவர் கூறினார். மாநில மொழி, பண்பாடு, பாரம்பரியத்திற்கு அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், த.வெ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானத்தை வரவேற்று பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பாணையில் முதலில் வந்தே மாதரம், அதன் பின்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என கூறப்பட்டுள்ளதோடு, தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என்று வற்புறுத்தவில்லை என தெரிவித்தார்.