தமிழக மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அருண் ராஜ் வெளியிட்டார்.
நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 51,306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 72,672 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டில் 41,721 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் 30,904 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
முக்கிய தரவரிசைப் பட்டியலில் விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்றார். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீனிகா 700 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், விருதுநகரைச் சேர்ந்த ஏ.எம். சுதர் 696 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
மேலும் 7.5% இடஒதுக்கீட்டுக்கான தனித் தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதில் நாகையைச் சேர்ந்த தினேஷ் 599 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், சேலத்தைச் சேர்ந்த தரனீஸ் 595 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 9,999 இடங்களும், பல் மருத்துவ படிப்புகளுக்கு 2,000 இடங்களும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கவுன்சிலிங்கிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படாது; தரவரிசைப் பட்டியலை மாற்ற முடியாது என்றும், கடந்த ஆண்டை விட பிடிஎஸ் இடங்கள் 200 குறைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.





