சென்னை: தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்களில் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சைபர் கிரைம் தொடர்பான விசாரணைகளில் டீலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இதற்குக் காரணம் என சங்கம் கூறுகிறது.
சங்கத் தலைவர் முரளி கூறுகையில், தமிழகத்தில் சுமார் 7,000 பெட்ரோல் பங்க்கள் உள்ளன. தினசரி விற்பனையில் சராசரியாக 40% வரை கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் கூகுள் பே போன்ற UPI வழி உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளில் நடைபெறுகிறது; மீதம் ரொக்கமாக செலுத்தப்படுகிறது என்றார்.
டிஜிட்டல் கட்டணத்தில் வாடிக்கையாளரின் பணம் எங்கிருந்து வந்தது போன்ற விவரங்கள் டீலர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும், சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரிக்கும் போது டீலர்களையும் அழைத்து விசாரிப்பதாகவும் அவர் கூறினார். இதனால் மன உளைச்சலும், பணிச் சீர்கேடும் ஏற்படுவதாக சங்கம் தெரிவித்தது.
மேலும், சைபர் கிரைம் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மேற்கோள் காட்டி வங்கிகள் டீலர்களின் கணக்குகளை முடக்குவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். இத்தகைய அலைக்கழிப்பும் கணக்கு முடக்கமும் தொடர்ந்தால், அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் டிஜிட்டல் கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்.
டீலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன், குறிப்பிட்ட பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக வழங்கி, முறையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.





