சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில், நீண்ட காலமாக மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருந்ததாக கூறப்படும் 92 கிராமங்களில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த கிராமங்களில் 1947 சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக இவ்வாறு கொடி ஏற்றம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 92 கிராமங்கள் மூன்று மாவட்டங்களில் உள்ளன. பிஜாப்பூரில் 33, சுக்மாவில் 50 மற்றும் நாராயண்பூரில் 9 கிராமங்கள் இதில் அடங்கும். இப்பகுதிகளில் சுதந்திர தினத்தை மக்கள் பங்கேற்புடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மாநிலத்தில் நக்சலிசம் மற்றும் இடதுசாரித் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில், ‘ஹர்கர் திரங்கா’ இயக்கத்தின் கீழ் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்த பகுதிகளில் முன்னர் தேசியக் கொடியை விட தீவிரவாதிகளின் கொடிகளே பறந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், இப்பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பொதுக் கட்டடங்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயர்கள் சூட்டப்பட உள்ளன. நக்சலிசம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களை கவுரவிக்கும் வகையில், சுதந்திர தினத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களது இல்லங்களுக்கு சென்று தேசியக் கொடியை வழங்க உள்ளனர்.