சென்னையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி தொழில் அதிபரிடமிருந்து ரூ.45 லட்சம் பறித்ததாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் புஹாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52), 2024 ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் புஹாரி (43) இடம்பெற்றிருந்தார்.
தொழில் அதிபர் அகில்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்த்து விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, யானைக்கவுனி போலீசார் பரங்கிமலை இன்ஸ்பெக்டராக இருந்த புஹாரியை கைது செய்தனர்.
அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும், ஆம்ஸ்ட்ராங் வழக்கை முன்வைத்து இதுபோல் இன்னும் எத்தனை பேரிடம் பணம் பறிக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் அதிகாரிகள் கேள்விகளாக முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில், அகில்குமாருடன் நட்பாக பழகியதாகவும், இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்ததாகவும் புஹாரி தெரிவித்ததாக தகவல். மேலும், அகில்குமாரிடம் வீடு வாங்கித் தரும்படி ஏன் கேட்டீர்கள் என்ற கேள்விக்கு அவர் மழுப்பலான பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.





