சென்னை: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தினார். வரும் லோக்சபா தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெறும் சட்டசபை தேர்தல்களிலும் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டின் பலனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்வைத்து பேசினார். குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட பெண்களை நினைத்து “இதயத்தில் இருந்து” பேசுவதாகவும், தன் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களின் பங்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக மண்ணில் அன்றும் இன்றும் பல பெண் ஆளுமைகள் இருப்பதாக கூறிய அவர், சுதந்திரப் போராட்டம் முதல் சமூக நீதி போராட்டம் வரை பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றார். கல்வி, நீதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளிலும் தமிழக பெண்களின் பங்கு பெரிதாக இருப்பதை மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு “சலுகை” அல்ல; சம உரிமை என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், 2021 சட்டசபையில் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 23 பெண்கள் உள்ளதாகவும், ஆனால் சதவீத அடிப்படையில் பெரிய உயர்வு இல்லை என்றும் கூறினார். இது ஒரு கட்சியின் தீர்மானம் அல்ல; தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் தீர்மானம் என்பதால் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதிகளை மறு வரையறை செய்வதில் தவறு இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக அரசு கொண்டு வரும் தீர்மானத்தை அதிமுக எதிர்ப்பதாகவும் கூறினார். அதே நேரத்தில், வரும் லோக்சபா தேர்தலிலும் அதன் பின்னர் சட்டசபை தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தின் குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாக தெரிவித்தார்.





