கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்டோர் காணவில்லை என கூறப்படுவதால், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் ஏழ்மையான சோகோ மாகாணமும், புகழ்பெற்ற காபி உற்பத்தி மண்டலமான ரிசாரால்டா மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாடு முழுவதும் 1,577 குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், அதில் 37 கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 18 மருத்துவமனைகள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கலி நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலை மருத்துவமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நோயாளிகள் உள்ளே சிக்கினர்; மருத்துவமனையின் சுமார் 30% கட்டமைப்பு சேதமடைந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசாரால்டாவின் பெரேரா நகரில் மட்டும் 60 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார், தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இரவு பகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலம்பியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உதவிக்கு பல நாடுகள் முன்வந்துள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





