புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட சைபர் மோசடி புகார்களில் உரிய நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளால், ரூ.11,158 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் மோசடிக்காரர்களிடம் செல்வது தடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. எம்.பி. பி.சி.மோகன் எழுப்பிய கேள்விக்கு லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், 2021ல் தொடங்கப்பட்ட ‘சைபர் நிதி மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு’ செயல்படத் தொடங்கியதிலிருந்து 32.80 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், ஜூன் 30 வரை இணைய மோசடிக்காக உருவாக்கப்பட்ட 3,718 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சைபர் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 15.75 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் 5.77 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதனங்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களும் முடக்கப்பட்டுள்ளன.

சைபர் மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் அடையாள விவரங்களை பதிவு செய்யும் ‘சந்தேக நபர் பதிவேடு’ 2024 செப். 10ல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஜூன் 30 வரை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட 30.48 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர் விவரங்களும், மோசடி பணத்தை மாற்ற பயன்படுத்தப்பட்ட 32.08 லட்சம் வங்கி கணக்குகளும் பதிவேட்டில் ஏற்றப்பட்டு, ரூ.25,698 கோடி மதிப்பிலான சந்தேக பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சைபர் மோசடி புகார்களை ஒரே மாதிரியான நடைமுறையில் கையாள தேசிய சைபர் குற்ற புகார் இணையதளம் மற்றும் மேலாண்மை அமைப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாகவும், இழந்த பணத்தை விரைவாக மீட்பது, வங்கி கணக்குகளை முடக்குவது, பரிவர்த்தனைகளுக்கு தடை கோருவது போன்ற வசதிகள் ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனுடன் குறுஞ்செய்தி, அழைப்பின்போது குரல் பிரசாரம், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட வழிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.