வடக்கு வங்கக் கடலின் மேல், சுமார் 21–23 கி.மீ. உயரத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிக செறிவும் தடிமனும் கொண்ட ஓசோன் படலம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பகுதி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு மேலான வான்வெளியுடன் தொடர்புடையதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
பூமியின் மேல் வளிமண்டலத்தை உலகளவில் பல ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் ஓசோன் நிலவரத்தை ஆய்வு செய்தபோது, வடக்கு வங்கக் கடல் பகுதியில் இந்த அசாதாரண ஓசோன் அடுக்கு பதிவானது.
இந்தக் கண்டுபிடிப்பு இந்திய வளிமண்டல ஆய்வு திட்டமான ‘நெட்ரேட்-ஏ.எஸ்.எம்.ஏ.’ மூலம் ஆவணப்படுத்தப்பட்டு, அமெரிக்காவின் எர்த் அண்டு ஸ்பேஸ் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக 25–30 கி.மீ. உயரத்தில் உள்ள ‘ஸ்ட்ராடோஸ்பியர்’ அடுக்கில் காணப்படும் ஓசோன் (O3), புற ஊதாக் கதிர்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள ஏரீஸ் (ARIES) நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், ஹரிங்கட்டா, கடாங்கி மற்றும் கொச்சி பகுதிகளில் இயங்கும் 206.5 மெகா ஹெர்ட்ஸ் ரேடார்கள் மூலம் தொடர்ச்சியான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், வடக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு நாளுக்கும் மேல் நீடித்த அசாதாரண ஓசோன் படலம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசோன் செறிந்த காற்று கீழ்நோக்கி நகர்ந்து பின்னர் மீண்டும் மேலே சென்றதன் விளைவாக இந்த அமைப்பு உருவானிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த எதிர்பாராத பதிவுகள், காற்றோட்டங்கள் ஸ்ட்ராடோஸ்பியர் வழியாக ஓசோனை எவ்வாறு கடத்துகின்றன என்பதை மேலும் புரிந்துகொள்ள உதவும் என்றும், இத்தகைய மாற்றங்களை இஸ்ரோ தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





