அறநிலையத் துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியை பயன்படுத்தி கல்லூரிகள் தொடங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கு, 2021 அக்டோபர் 6 அன்று உயர் கல்வித் துறை பிறப்பித்த அரசாணையை மையமாகக் கொண்டது. அதன்படி, கோவில் நிர்வாகத்தின் கீழ் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் கொளத்தூரிலும், பழநி தண்டாயுதபாணி கோவில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் நிதியில் விளாத்திகுளத்திலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிதியில் திருச்செங்கோட்டிலும் கல்லூரிகள் அமைப்பதாக குறிப்பிடப்பட்டது.

மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர். ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், அறநிலையத் துறை சட்டத்தில் கூறப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் கோவில் நிதியை பயன்படுத்த முயற்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.

நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் இ. மனோகரன் அமர்வு முன் நடந்த விசாரணையில், அறநிலையத் துறை தரப்பில், கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் அமைக்கப்பட்டு மூன்று பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திருச்செங்கோடு மற்றும் விளாத்திகுளத்தில் கல்லூரிகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்றும், செயல்பாட்டில் உள்ள கல்லூரிகளில் ஹிந்து சமயப் பாடங்கள் நடத்தப்படுகின்றன என்றும் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கல்விக்காக கோவில் நிதியை பயன்படுத்தலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், விளாத்திகுளம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் கல்லூரி கட்ட கூடுதல் நிதி தேவைப்பட்டால் அரசின் உதவியை நாடலாம் என்றும், கோவில் உபரி நிதியை சட்ட விதிகளின்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.