பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்து நிவாரணம் கோரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஆர். பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், 2023 ஜனவரி 6 அன்று விளாத்திகுளம் பெரியசாமிபுரம் கிராமத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்ததாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., விளாத்திகுளம் டி.எஸ்.பி. மற்றும் சூரங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய அவர், புகார் மனுவை பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.
நீதிபதி லட்சுமி நாராயணன் முன் நடந்த விசாரணையில், காவல்துறை தரப்பில் மனுதாரர் தனிநபர் புகார் வழியாக நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் மீண்டும் புகார் அளிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்து, உயர் நீதிமன்ற மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.





