மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன் இடது பக்க இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். உடனடியாக சென்னை விமான நிலையத்தில் முழுமையான அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானம் உடனடியாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. எந்தவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் மீட்பு மற்றும் அவசரப் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.
இரவு 11.37 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்திற்கும் பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறினர்.
தரையிறங்கிய உடனே பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பதற்றம் பின்னர் தணிந்தது. தொடர்ந்து அவசரநிலை வாபஸ் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.





