தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உருவாகி வரும் இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.950 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. குறைந்த செலவில் ஏவுதல் செய்ய முடிவதால் இந்தியாவின் ஏவுதல் சேவைகளில் பல நாடுகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூடுதல் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தில் குலசேகரன்பட்டினம் தேர்வானது.

பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இருப்பதால், இங்கிருந்து குறைந்த எரிபொருள் செலவில் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு செலுத்த முடியும் என கூறப்படுகிறது. இதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 2024ல் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இரண்டாவது ஏவுதளத்துக்கான அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தினசரி இயக்கம் மற்றும் வணிக ரீதியிலான ஏவுதல் சேவைகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் வகையில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தகுதியான நிறுவனங்களிடமிருந்து விருப்ப விண்ணப்பங்களை கோர ‘இன்-ஸ்பேஸ்’ (Indian National Space Promotion and Authorization Center) நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்வாகும் நிறுவனத்திற்கு இஸ்ரோ தொழில்நுட்ப வழிகாட்டுதல், பயிற்சி உள்ளிட்ட உதவிகளை வழங்கும்; இது மூன்று ஏவுதல் சேவைகள் நிறைவடையும் வரையிலோ அல்லது ஒரு ஆண்டு வரையிலோ நீட்டிக்கப்படும்.

தகுதிக்கான நிபந்தனைகளாக, குறைந்தது ஏழு ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்பதும், கடந்த ஏழு ஆண்டுகளில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ரூ.3,500 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனை அல்லது வருவாய் பெற்றிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் இஸ்ரோ மேம்பட்ட விண்வெளி திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறப்படுகிறது; மேலும் இத்தளத்தில் எஸ்.எஸ்.எல்.வி. மட்டுமின்றி, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ‘விக்ரம்-1’, அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் ‘அக்னிபான்’ போன்ற தனியார் ராக்கெட்டுகளையும் ஏவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.