சவுதி அரேபிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஈரானிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் சீர்காழி தாலுகா தொடுவாய் சுனாமி நகர் காந்தி தெருவைச் சேர்ந்த பக்ரிசாமியின் மகன் மாவீரன் (40). இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். காயமடைந்தவர்கள் கீழமூவர்கரை கோவிந்தசாமியின் மகன் சங்கர், திருமுல்லைவாசல் சாமிதுரையின் மகன் பால்ராஜ், கடலூர் மாவட்டம் சொத்திகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர். இவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 11 அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள், மாவீரன் உள்ளிட்டோர் சென்ற படகில் கொள்ளையடிக்க முயன்றதாகவும், இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மாவீரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கர் படுகாயமடைந்த நிலையில், மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த சவுதி அரேபியா கடற்படை வீரர்கள் காயமடைந்த மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாவீரனின் உடலை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் திருமுல்லைவாசல் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை தொடங்கி, மத்திய வெளியுறவுத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மாவீரனின் உடலை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.