‘ரீல்ஸ் காலம்’ என குறிப்பிட்டு, இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். சமூக ஊடக பிரபலங்கள் தவறான திசையில் ஈர்க்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை நூலை டில்லி விஞ்ஞான் பவனில் வெளியிட்ட நிகழ்ச்சியில் மோடி பேசினார். அந்த நூலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும், அது இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இளைஞர்களை நோக்கி பேசிய அவர், ‘குறுக்குவழிகள் உங்கள் வாழ்வை குறுக்கிவிடும்’ என்று கூறினார். தங்களுக்கு பிடித்தவர்களின் சுயசரிதைகளைப் படித்து, பிறரின் போராட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கோவிந்தின் சுயசரிதையை இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட மோடி, அதிலிருந்து வரும் தலைமுறையினர் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும் என்றார். சூழ்நிலைகளால் துவண்டு போகாமல், ஒவ்வொரு சவாலையும் வெல்லும் உறுதியுடன் இருக்கும் கோவிந்தைப் போன்ற மேலும் பல இளைஞர்கள் நாட்டிற்கு தேவை என்றும் அவர் தெரிவித்தார்.