மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள சிராக் நகரில் ஆகஸ்ட் 12 அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். மலைப்பகுதியிலிருந்து மிகப்பெரிய கல் ஒன்று உருண்டு வந்து கீழே இருந்த 3 வீடுகள் மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நீண்ட நேரம் போராடி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இடிபாடுகளில் இருந்து 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் முகமது சமீர் அன்சாரி (14), சாஹில் ஹுசென் அப்துல் காசி (19), அபன் ஆரிப் ஷேக் (2), மனாட் ஆரிப் ஷேக் (4), மர்ஜினா ஆரிப் ஷேக் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரின் உடலை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.

மேலும் 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் இன்னும் யாரேனும் சிக்கியிருக்கக் கூடுமென தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.