சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ள மாநில அரசை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தமிழக நலனுக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்தின் மாண்பைச் சிதைக்கும் முயற்சியாகும் என்றும், “ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு” என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்றும் கூறினார். மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போதுதான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் பார்லிமெண்டில் சம வலிமையுடன் ஒலிக்கும் என அவர் வலியுறுத்தினார்.

தொகுதி மறுவரையறை என்பது எல்லைகளை மாற்றுவது மட்டுமல்ல; மக்களுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தென் மாநிலங்கள் உட்பட எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.

இத்தகைய சீர்திருத்தங்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பதைத் தவிர்த்து, மாநில அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.