சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை (அறநிலையத்துறை) அமைச்சர் ரமேஷ் மற்றும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இடையே துறை செயல்பாடு தொடர்பாக வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
முன்னதாக சேகர்பாபு, அமைச்சர் ரமேஷ் அனுபவம் குறைவானவர் என்றும், அதிகாரிகளை மிரட்டுவதாகவும், எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசுவதாகவும் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் ரமேஷ் அளித்த பேட்டியில், “அரைகுறையாக தான் இருக்கிறேன்” என்ற சேகர்பாபுவின் கூற்றை ஏற்றுக்கொண்டார். ஆனால் அது, அறநிலையத்துறையில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல், முறைகேடுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை என்பதைக் குறிக்கிறது என்றும், அனைத்தும் தெரிய வந்த பின் சேகர்பாபு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், “கோவில் பணத்தை கொள்ளையடிப்பது, முறைகேடு செய்வது, நிர்வாக சீர்கேடு செய்வது போன்றவற்றில் எனக்கு அனுபவம் குறைவு; அவற்றை கற்றுக்கொள்ள நான் தயாரில்லை” என கூறினார். பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்துவதை மிரட்டல் என கூறுவது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பல கோவில் உபயதாரர்கள் தன்னிடம் பேசியதாக கூறிய ரமேஷ், கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு பணியை முடிக்க பல பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், தற்போது அப்படி இல்லாமல் விரைவாக பணிகள் முடிகின்றன என்றும் அவர்கள் தெரிவித்ததாக கூறினார். சேகர்பாபு உபயதாரர்களை மிரட்டி ‘வீடியோ’ எடுத்திருக்கலாம் என்றும், தன்னிடம் அந்த பழக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.




