சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், கத்தோலிக்க திருச்சபை சார்ந்த அமைப்புகள் கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணியை நடத்தின. இதில் சட்டசபை சபாநாயகர் பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது.
பேரணியில் “கருக்கலைப்பு என்பது கொலை”, “கருவைக் கலைக்க உரிமை இல்லை” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர், கரு உருவான கணத்திலிருந்தே உயிர் தொடங்குகிறது என்றும், ஒவ்வொரு குழந்தையும் கடவுள் அளித்த பரிசு என்றும் கூறி, கருக்கலைப்புக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பதவியில் இருப்பவர், மத நம்பிக்கையை முன்வைத்து பெண்களின் உடல் சார்ந்த உரிமை மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளுக்கு எதிராகப் பேசுவது தவறான முன்னுதாரணமாகும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்கு முன்பும் சட்டசபையில் பைபிள் வாசகங்களை மேற்கோள் காட்டி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது இந்த விவகாரம் மீண்டும் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 1971ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் கருக்கலைப்புக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை வழங்குகிறது என்றும், உச்சநீதிமன்றமும் கருக்கலைப்பை அங்கீகரித்துள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில், சட்டத்துக்கும் பெண்களின் உரிமைக்கும் எதிராகச் செல்லும் வகையில் பார்க்கப்படும் மத ரீதியிலான பிரசாரத்தில் சபாநாயகர் பங்கேற்றது சரிதானா என்ற கேள்வியும், அரசு தரப்பில் விளக்கம் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.





