இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1983க்குப் பிறகு உள்நாட்டு போராக வெடித்து, 2009 மே மாதத்தில் முடிவடைந்த நீண்டகால மோதலின் போது ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். தற்போது அவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகின்றனர்.
போர் காலத்தில் முறையான பயண ஆவணங்கள் இன்றி அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக பதிவு செய்தவர்கள்மீது பதியப்பட்டிருந்த குடியேற்றச் சட்ட மீறல் வழக்குகள் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் தளர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா. அகதிகள் அலுவலகத்தின் உதவியுடன் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் வழியாக இவர்களின் குடியுரிமை உறுதி செய்யப்படும்.
தாயகம் திரும்ப விரும்புவோர்மீது கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்பதை புலனாய்வு பிரிவு மூலம் தீவிரமாக பரிசோதிக்கப்படும். சட்ட சிக்கல்கள் இல்லாதவர்கள் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்கள் வழியாக தற்காலிக பயண ஆவணங்களுடன் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மட்டும் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இந்த திட்டம் 2006 ஆகஸ்ட் 1க்கு முன்பும், போர் முடிவடைந்த 2009 மே 19 வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவில் குடியேறியவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





