தமிழ்நாடு சட்டசபையில் விவாதிக்கப்படும் விஷயங்களை மையமாக வைத்து மட்டும் பேச வேண்டும்; அதைவிட்டு தேவையற்ற கருத்துகள் பேச வேண்டாம் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் விவாதத்தின் போது ஏற்பட்ட சில வாக்குவாதங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னணியாக இந்த அறிவுரை வந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியபோது, முந்தைய தி.மு.க. ஆட்சிக் கால நிர்வாக பாணியை குறிப்பிட்டு ஆளும் தரப்பை நோக்கி கருத்து தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஆனந்த் பதிலளித்தார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் ரகுபதி துறைசார்ந்த விவாதத்தைத் தாண்டி மாநில அரசு மற்றும் மத்திய அரசை விமர்சித்ததுடன், நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித்துறையில் ‘கமிஷன்’ குறித்த குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இதற்கு அமைச்சர் ஆனந்த், இது பழைய காலக் கதையென கூறி, ஆதாரம் இருந்தால் சபையில் தெரிவிக்கலாம் என சவால் விடுத்தார்.

கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் சிக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், சட்டசபையில் பேசும்போது உணர்ச்சி வேகத்தில் பேசியதாகவும், முதல்வரை காயப்படுத்தும் நோக்கம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

மேலும், நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும் முறையை தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் விமர்சித்ததைத் தொடர்ந்து, மரிய வில்சன் கடுமையாக பதிலளித்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் வேலு, நிதியமைச்சருக்கு ஆதரவாக பேசினார். இத்தகைய நிகழ்வுகள் குறித்து தகவல் அறிந்த ஸ்டாலின், சில எம்.எல்.ஏ.க்களை அறிவாலயத்திற்கு அழைத்து கண்டித்து, சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் விஷயங்களைப் பற்றியே பேச வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.