சென்னை: தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழக சட்டசபையில் அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிய உள்ளார்.
செய்தி குறிப்பின்படி, கடந்த ஏப்ரலில் பார்லிமெண்டின் நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டாலும், அது தோற்கடிக்கப்பட்டது. தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், திருத்தப்பட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை விவாதிக்க அண்மையில் தமிழக எம்பிக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 57 எம்பிக்களில் 19 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்; திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
அந்த கூட்டத்தில், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க தமிழக சட்டசபையில் அரசின் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆக.12ல் முன்வைக்கப்படும் தீர்மானம், தற்போதுள்ள லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கை 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கொண்டு வரப்படுகிறது.





