சென்னை: மத்திய அரசின் சில சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டசபையில் ஒரே நாளில் இரண்டு தீர்மானங்கள் திங்களன்று நிறைவேற்றப்பட்டன. விஜய் தலைமையிலான தமிழக அரசு கொண்டு வந்த இந்த தீர்மானங்கள் மூலம், வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எப்.சி.ஆர்.ஏ.) தொடர்பான திருத்தங்களை வாபஸ் பெறவும், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யவும் மத்திய அரசை சட்டசபை வலியுறுத்தியது.

நீட் தொடர்பான தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் முன்வைத்தார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானதாக நீட் இருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருவதாகவும், கிராமப்புறம் மற்றும் சமூக-பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், குறிப்பாக தமிழ் வழி மாணவர்கள், மருத்துவ கல்வி வாய்ப்பில் பாதிப்பு அடைவதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.

மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கும் நீட் வழிவகுப்பதாகவும், பள்ளி பாடத்திட்டத்திலிருந்து மாணவர்களின் கவனத்தை விலக்கி நீட் பயிற்சியிலேயே முழுக் கவனம் செலுத்த வற்புறுத்துவதாகவும் கூறப்பட்டது. 2021ல் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டதாகவும் தீர்மானம் சுட்டிக்காட்டியது.

எப்.சி.ஆர்.ஏ. தொடர்பான தீர்மானத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்வைத்தார். தொண்டு நிறுவனங்களின் எப்.சி.ஆர்.ஏ. பதிவு புதுப்பிக்கப்படாமல் காலாவதியானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, அவற்றின் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் வகையில் திருத்தம் அமையக்கூடும் என்பதில் சட்டசபை ஆழ்ந்த கவலை தெரிவித்தது. குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் தன்னாட்சியும் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனக் கூறி, தற்போதைய வடிவிலான திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரித்த நிலையில், குரல் ஓட்டெடுப்பின் மூலம் இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.