தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு தகராறுக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மேலும், பயன்பாட்டில் இல்லாததாக குறிப்பிடப்பட்ட மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் இந்த வழக்கை ஒப்படைக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தனது பதிலில் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையின் தொடர்ச்சியாக இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்கா மலையில் தோன்றி, தமிழகத்தின் கடலூர் வழியாக வங்கக்கடலில் கலக்கும் ஆற்றே தென்பெண்ணையாறு. சுமார் 350 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றின் பெரும்பகுதி தமிழகத்தில் பாய்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே கோலார் மாவட்டத்தில் ‘யார்கோல்’ பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்ததை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி, இவ்விவகாரத்திற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்குப் பதிலாக, மகதாயி தீர்ப்பாயத்திடம் வழக்கை ஒப்படைக்க உச்சநீதிமன்ற அனுமதி கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதன் மீது உச்சநீதிமன்றம் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு தற்போது புதிய தீர்ப்பாயமே அமைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.