சூரியன்–பூமி–நிலவு ஒரே நேர்கோட்டில் வரும் போது, நிலவு சூரிய ஒளியை மறைத்து பூமியில் நிழல் விழுவதையே சூரிய கிரகணம் என்கிறோம். இன்று ஆக.12 அன்று நிகழும் இந்த ஆண்டின் ஒரே முழு சூரிய கிரகணம் சுமார் 2 நிமிடம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர். கிரீன்லாந்து, வடக்கு ரஷ்யா, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின், போர்ச்சுகல் சில பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் இது தெரியும் என கூறப்படுகிறது.
இந்திய நேரப்படி இரவு 11:16 மணியளவில் முழு கிரகணம் நிகழும். ஆனால் இந்தியாவில் இது இரவு நேரத்தில் நடைபெறுவதால் நேரடியாகக் காண முடியாது. இருப்பினும், நாசாவின் சமூக வலைதள நேரலை மூலம் இதைப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் நாடு முழுவதும் முழுமையான கிரகணம் தெரியாது என்றாலும், சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் காணப்படும். அலாஸ்கா உள்ளிட்ட 26 மாநிலங்களில் குறைந்தபட்சம் கிரகணத்தின் ஒரு பகுதியையாவது காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதி கிரகணத்தைப் பார்க்கும் அனைவரும் சான்றளிக்கப்பட்ட கிரகணக் கண்ணாடிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாமல் சூரியனை நேரடியாகப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது.





