சட்டவிரோதமாக குடியேறி தங்கியுள்ளதாக வந்த புகார் மற்றும் உளவுத்துறை தகவலின் அடிப்படையில், தாம்பரம் மாநகர போலீசார் 160 வங்கதேசத்தினரை கண்டறிந்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் சென்னை ஒட்டிய புறநகர் பகுதிகளான தையூர், கேளம்பாக்கம், நாவலூர், தாழம்பூர், படூர், புதுப்பாக்கம், கானத்தூர், முட்டுக்காடு உள்ளிட்ட இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக தங்கி கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் காட்டிக் கொண்டு சில வங்கதேசத்தினர் போலி ஆதார் அட்டையுடன் தங்கி வேலை செய்வதாக தாம்பரம் காவல் ஆணையருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கேளம்பாக்கம் உதவி ஆணையர் ஜான் விக்டர் மற்றும் கேளம்பாக்கம் ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில், கேளம்பாக்கம்–தாழம்பூர்–கானத்தூர் காவல் நிலைய எல்லைகளில் ஆகஸ்ட் 2 அன்று திடீர் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்ட 250 பேரை கழிப்பட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, அவர்களின் ஆதார் உள்ளிட்ட அரசு அடையாள ஆவணங்களின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்பட்டது. இதில் 128 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அவர்களை சென்னை அனகாபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் மேலும் 32 பேர் பிடிபட்டனர். வங்கதேச துாதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமான டிக்கெட் ஏற்பாடுகளுக்குப் பிறகு 160 பேரும் தனி விமானத்தில் வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது.





