சட்டசபையில் லோக்சபா தொகுதி மறுவரையறைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாநில உரிமைகளை காக்க கட்சிகளின் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றுபட வேண்டும் என்றார். தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய தி.மு.க.வுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 லோக்சபா தொகுதிகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், மறுவரையறை நடந்தால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற சில மாநிலங்களில் வெற்றி பெற்றாலே பிரதமர் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகி, தென் மாநிலங்களின் தாக்கம் குறையும் என அவர் வாதிட்டார்.

தற்போதுள்ள தொகுதிகள் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்காக, இப்படியான மசோதா வந்தால் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் பார்லிமென்டில் எதிராக வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

லோக்சபா தொகுதிகளை 50% உயர்த்துவதாக கூறினாலும் தமிழகத்திற்கு பாதிப்பே அதிகம் என அவர் தெரிவித்தார். மேலும், மத்திய அரசுக்கு தமிழகம் செலுத்தும் ஒரு ரூபாயில் 29 பைசா மட்டுமே நிதி பகிர்வாக கிடைக்கிறது என்றும், வளர்ச்சிக்காக உழைத்தாலும் தேவையான அதிகாரத்தை உருவாக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.