ஏர் இந்தியாவில் பணியாற்றும் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தச் சோதனை இன்று தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவுக்கு காரணமாக, ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் புக்கெட்டிலிருந்து டில்லி நோக்கி 137 பயணிகள் மற்றும் எட்டு சிப்பந்திகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா ‘ஏர்பஸ் ஏ320’ விமானத்தில் ஏற்பட்ட சம்பவம் குறிப்பிடப்படுகிறது. நடுவானில் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி அளவுக்கு வேகமாக கீழிறங்கியதாகவும், இதில் சுமார் 20 பயணிகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த விமானத்தை இயக்கிய முதன்மை விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகள் சிலர், சம்பவ நேரத்தில் முதன்மை விமானி காக்பிட் அறையில் சுருண்டு கிடந்ததாகவும், சீரற்ற நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுநீர் மாதிரி அளிக்க கூட அவர் தனியாக நின்று கொள்ள முடியாததால், உடனிருந்த அதிகாரிகள் உதவியதாகவும் கூறப்படுகிறது.
புக்கெட்டில் இருந்து புறப்படும் முன் கஞ்சா பயன்படுத்தியதாக விமான பணிப் பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா மற்றும் ஏஐ எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





