ஊபர், ஓலா, ரேபிடோ போன்ற பைக் டாக்சி சேவைகளை வழங்கும் செயலிகளில், புக்கிங் செய்யும் நேரத்திலோ அல்லது பயணம் தொடங்கும் போதேயோ “டிப்ஸ்” அல்லது “அட்வான்ஸ் டிப்ஸ்” கேட்டு பயணிகளை வற்புறுத்தும் அம்சங்களை உடனடியாக நீக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வண்டியில் ஏறுவதற்கு முன்போ, டிரைவர் பயணத்தை ஒப்புதல் அளிப்பதற்கு முன்போ டிப்ஸ் கேட்கக் கூடாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதல் தொகை கொடுத்தால் வண்டி விரைவில் கிடைக்கும் அல்லது டிரைவர் எளிதில் ஒப்புக்கொள்வார் என்ற பொருளில் வாசகங்களை செயலியில் காட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது எனக் கூறிய அமைச்சகம், டிப்ஸ் வசதி முழுக்க விருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றும், கட்டணம் செலுத்தும் நேரத்திலோ அல்லது பயணம் முழுமையாக முடிந்த பின்னரே கூடுதல் தொகை வழங்கும் தேர்வு இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

டிரைவர்களின் கட்டணப் பிரச்னைகள் மற்றும் பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.