மும்பை: மஹாராஷ்டிரா வாஷிம் நகரில் பணிபுரியும் பஸ் கண்டக்டர் ஒருவர், பயணி தவறவிட்ட ரூ.24 ஆயிரத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உரியவரிடம் திருப்பி ஒப்படைத்ததற்காக பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.
கண்டக்டர் ராஜூ வானி, 2024 ஏப்ரலில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின் வழக்கம்போல் இருக்கைகளைச் சோதித்த போது ஒரு சிறிய பையை கண்டார். அதில் ரூ.24,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், ‘கசாபாய் கெய்க்வாட்’ என்ற பெயர் உள்ள மருத்துவர் சீட்டும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பணத்தின் உரிமையாளர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அவர் பஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார். மேலும் விசாரணை மையத்துக்கும் தகவல் தெரிவித்து, பணத்தைத் தேடும் எவரையும் தன்னிடம் அனுப்புமாறு கேட்டார். ஆனால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தும் யாரும் பணத்தை கோரவில்லை; சீட்டில் இருந்த எண்ணை தொடர்புகொள்ள முயன்றதும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பஸ்சில் ஒரு மூதாட்டி ஏறி மாலேகானுக்கு பயணச்சீட்டு கேட்டார். 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசப் பயணம் என்பதால், வயதை உறுதிப்படுத்த ஆதார் அட்டையை காட்டுமாறு ராஜூ கேட்டார். அப்போது ஆதாரில் உள்ள பெயர், மருத்துவர் சீட்டில் இருந்த பெயருடன் பொருந்துவதை அவர் கவனித்தார்.
உடனடியாக மூதாட்டியை பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சரிபார்ப்புக்குப் பிறகு பணம் மூதாட்டியிடம் திருப்பி வழங்கப்பட்டது. மகிழ்ச்சியடைந்த அவர் கண்டக்டருக்கு நன்றி தெரிவித்து ரூ.1,100 பரிசாக வழங்கினார்; நீண்ட காலம் பணத்தை பாதுகாத்து நேர்மையாக ஒப்படைத்ததற்காக பலரும் பாராட்டி வருகின்றனர்.





