இந்தியாவில் பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை இதுவரை நான்கு முறை—1952, 1963, 1973 மற்றும் 2002—நடைபெற்றுள்ளது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட கடைசி மறுவரையறை 1971ல் நடைபெற்றபோது, லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டது.
குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்பதற்காக, 1976ல் (எமர்ஜென்சி காலத்தில்) சட்டத் திருத்தம் மூலம் தொகுதி எண்ணிக்கையை முடக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அது 2001 வரை தொடர்ந்த நிலையில், 2002ல் வாஜ்பாய் அரசு அதை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
இப்போது மறுவரையறை மீண்டும் தொடங்கும் நிலையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களுக்கு லோக்சபாவில் ஒப்பீட்டளவில் தாக்கம் குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில், மத்திய அரசு அந்த அச்சங்களை நீக்க முயன்றுள்ளது.
லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென் மாநிலங்களின் உரிமையோ பிரதிநிதித்துவமோ குறையாது என உறுதியளித்தார். 543 இடங்களிலிருந்து 816 ஆக (50% கூடுதல்) லோக்சபா இடங்கள் உயர்த்தப்படும் மாதிரியை அவர் குறிப்பிட்டு, எந்த மாநிலத்துக்கும் இடங்கள் குறையாது; வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்றார். இதன் படி தென் மாநிலங்களில் மட்டும் இடங்கள் 129லிருந்து 195 ஆக உயரும்; பாராளுமன்றத்தில் தென் மாநிலங்களின் மொத்த பங்கு 24% என்ற நிலை மறுவரையறைக்குப் பிறகும் தொடரும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தென் மாநிலங்கள், மக்கள் தொகை மட்டுமே அளவுகோலாக இருந்தால் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அது தண்டனையாகவும், கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு பரிசாகவும் அமையும் என வாதிடுகின்றன. மேலும் 50% கூடுதல் இடங்கள் இருந்தாலும் வட மாநிலங்களில் தான் அதிக உயர்வு ஏற்படும்; உதாரணமாக உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகள் 120க்கு மேலாக உயர வாய்ப்புள்ளதாக கூறி, இதனால் தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த ஓட்டு பலம் குறையலாம் என அச்சம் தெரிவிக்கின்றன. மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் பாராளுமன்ற ஒப்புதல் மற்றும் ஜனாதிபதி சம்மதம் பெற்ற பிறகே அமலுக்கு வரும்; 2029 வரை நடைபெறும் தேர்தல்களில் தற்போதைய அமைப்பே தொடரும் என மத்திய அரசு கூறுகிறது. மேலும், லோக்சபாவில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், சட்டசபை–லோக்சபா தொகுதிகளை சமமாகப் பிரிக்கவும் மறுவரையறை அவசியம் எனவும் விளக்கம் அளிக்கப்படுகிறது.





