சட்டசபை தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு, அதற்குக் காரணமானதாகக் கூறப்படும் மாவட்டச் செயலர்கள்மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்க வேண்டாம் எனக் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
தோல்விக்குப் பிந்தைய கட்சி மறுசீரமைப்புக்காக கள ஆய்வு குழுவும் மறுசீரமைப்பு குழுவும் அதிரடி மாற்றங்களை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாக அமைப்புகளை 78-இலிருந்து 120-க்கும் மேலாக உயர்த்தவும், ஒரு மாவட்டச் செயலருக்கு 2 முதல் 3 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கும் வகையில் பொறுப்புகளை மறுசீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சிக்குள் நீண்ட காலமாக பதவியில் இருப்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் தேர்தல் பணியில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் பதவி மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில் மாவட்டச் செயலர்களை மாற்றுவது மற்றும் இளைஞரணி சார்ந்தவர்களை நியமிப்பது தொடர்பாக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேலும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி கூறுகிறது.
ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்திருந்தாலும், இன்னும் மறுசீரமைப்பு தொடங்கவில்லை. செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற உள்ள திமுக “முப்பெரும் விழா” முடிந்த பின் மாற்றங்களை மேற்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாகிகள் எழுதிய கடிதத்தில், குழுக்கள் அறிக்கை அளித்து பல நாட்கள் ஆனபோதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டச் செயலர் தோப்பு வெங்கடாசலத்தை நீக்கியதும் உடனடியாக புதிய மாவட்டச் செயலரை அறிவிக்க வேண்டுமெனவும், அதிருப்தி அல்லது கட்சி மாற்றம் போன்ற அச்சங்கள் மாற்றங்களைத் தடுக்கக் கூடாதெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகள் நியமனத்தில் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு பழைய முகங்களுக்கு “குட் பை” சொல்ல தயங்க வேண்டாம் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.




