லண்டன்: பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வியூக நிபுணரும் ஊடக நிர்வாகியுமான தமிழர் கவுதம் ரங்கராஜனை அரசின் புதிய முக்கிய பதவிக்கு நியமித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமராக பொறுப்பேற்ற பர்ன்ஹம், அரசின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ‘கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணர் ஆலோசகர்’ என்ற புதிய பதவியை அவர் உருவாக்கியுள்ளார்.

இந்தப் பதவிக்கு கவுதம் ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; அவர் இந்த வாரம் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநிறுவன திட்டமிடல், ஊடகம் மற்றும் பொதுசேவை, ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளில் அவருக்கு நிபுணத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், நிர்வாக அமைப்பு மாற்றங்கள் மற்றும் பெருநிறுவன திட்டமிடலில் கவுதம் ரங்கராஜனுக்கு அனுபவம் உள்ளதாகவும், பிரிட்டன் அரசின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களை முன்னெடுக்க அவர் முக்கிய பங்காற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் ரங்கராஜன் பிபிசியில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மாறிவரும் சந்தை, பார்வையாளர் போக்கு மற்றும் தொழில்நுட்ப சூழலில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என்றும், பெரிய அளவிலான நிர்வாக/திட்ட மாற்றங்களை வழிநடத்துதல் மற்றும் சிக்கலான கொள்கை, நிதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் திறமை கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.