தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை தீவிரமாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ததாகவும், புதுச்சேரியில் லேசான மழை பதிவானதாகவும், காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி பிடிஓவில் 7.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஆக.13 முன்னறிவிப்பு: நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை வாய்ப்பு உள்ளது.
ஆக.14 முன்னறிவிப்பு: நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





