இன்றைய ‘ரீல்ஸ்’ யுகத்தில் விரைவான வெற்றிக்காக குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுத்தால், பயணம் பாதியிலேயே முடிந்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். மற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ள சுயசரிதைகளை இளைஞர்கள் வாசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் அவர் பேசினார். 2017 முதல் 2022 வரை நாட்டின் 14வது ஜனாதிபதியாக பணியாற்றிய கோவிந்த், Triumph of the Indian Republic: My Life, My Struggles என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார்.
விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடினமான சூழல்களைத் தாண்டி உறுதியான மனப்பான்மையுடன் நாட்டின் உயர்ந்த அரசியலமைப்பு பதவியை ஒருவர் எவ்வாறு அடைய முடியும் என்பதற்கு கோவிந்தின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு என மோடி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கோவிந்த் பொது வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான பணிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். இந்த சுயசரிதை இந்திய ஜனநாயக மரபின் ஒரு சின்னமாக மாறக்கூடும்; இளம் தலைமுறைக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்படாமல் சவால்களை முறியடிக்கும் உறுதியுடன் மேலும் பல இளைஞர்கள் தேவை என மோடி கூறினார். அத்தகைய மனப்பான்மையே ‘சுயசார்பு இந்தியா’வுக்கான பாதையை உருவாக்க உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





