புதுடில்லி: பார்லிமென்ட் விவாதங்களில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விலகிச் செல்வது “மிகுந்த விரக்தியை” ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்தார்.

பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் அதில் கலந்து கொள்ள மறுப்பதாகவும் கூறினார். ஜனநாயகத்தில் பொதுவாக எதிர்க்கட்சிகள் விவாதத்தை கோரும்; ஆளும் தரப்பு அதற்கு அவையில் பதிலளிக்கும் என்றார்.

தன் அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக அரசு விவாதம் விரும்பும் நிலையில், எதிர்க்கட்சிகள் அதிலிருந்து “ஓடி ஒளியும்” சூழல் உருவாகியுள்ளதாகவும், இது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

விவாதம் இல்லாமல் பார்லிமென்ட் எப்படி இயங்கும் என்று கேள்வி எழுப்பிய ரிஜிஜூ, பதாகைகள் ஏந்துதல், முழக்கமிடுதல், திட்டுதல் போன்றவை காங்கிரசின் வழக்கமாகிவிட்டதாக குற்றம்சாட்டினார். ஆக.13 கூட்டத்தொடரின் கடைசி நாள் என குறிப்பிட்ட அவர், உடனடியாக விவாதத்தை தொடங்குமாறு எதிர்க்கட்சிகளிடம் மீண்டும் வேண்டுகோள் வைத்ததாகவும் கூறினார்.