திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரியில் இருந்து ரூ.8 கோடிக்கு மேல் மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டதாகக் கூறி, அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் (DVAC) புகார் மனு அளித்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

புகார் மனுவின்படி, குமரனுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 125 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் 2025 டிசம்பர் 14 அன்று திமுக மாநாடு நடைபெற்றது. அந்த இடத்துக்கு அருகிலுள்ள மலப்பம்பாடி கிராம ஏரியில் இருந்து மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு, மாநாடு நடந்த பகுதியில் கொட்டி சமப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மண் கொள்ளையில் வருவாய்த்துறை, கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும், முன்னாள் அமைச்சர், அவரது மகன் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரியுள்ளது.

புகாருடன் தொடர்புடைய படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் இணைத்துள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன், கரூரில் சாலை அமைக்காமல் அமைத்ததாகக் கூறப்படும் ரூ.3.2 கோடி முறைகேடு தொடர்பாக கடந்த ஜூன் 25 அன்று எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.