புதுடில்லி: இந்தியாவில் முதல்முறையாக, தனியார் பிராண்ட் பெயரில் ஒரு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதன்படி தேஜஸ் எக்ஸ்பிரஸ், ‘ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் இயக்கப்படவுள்ளது.

வணிக விளம்பர நோக்கில் நிறுவனப் பெயர்களுடன் ரயில்களை பிராண்டிங் செய்து இயக்கும் நடைமுறை பல நாடுகளில் உள்ளது. அந்த வரிசையில், லக்னோ–டில்லி இடையே ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸுக்கு தனியார் பிராண்ட் பெயரிடும் ஏற்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், தேஜஸ் எக்ஸ்பிரஸுக்கான விளம்பர பிராண்டிங் உரிமையை கோகோ கோலா நிறுவனம் பெற்றுள்ளது. ஒப்பந்தத்தின் படி, 5 எல்.எச்.பி பெட்டிகள் ஸ்ப்ரைட் விளம்பர வடிவமைப்புடன் இயக்கப்படும்; இந்த உரிமம் 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இரு திசைகளிலும் புறப்படும் நிலையங்களிலும் வழித்தட நிலையங்களிலும் இந்த ரயிலை ‘ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ என அறிவிக்க வடகிழக்கு ரயில்வேக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தேஜஸ் எக்ஸ்பிரஸ் முழுமையான குளிர்சாதன வசதியுடன், நவீன வசதிகள், உணவு மற்றும் பொழுதுபோக்கு ஏற்பாடுகள் கொண்டதாக ஐஆர்சிடிசி குறிப்பிட்டுள்ளது.

மேலும், லக்னோ–டில்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் தனியார் சேவையாக இயக்கப்பட்டாலும், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களை இந்திய ரயில்வேக்கு செலுத்துகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.