முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகளில் கேரள அரசு தொடர்ந்து தடையிட்டு வருவதாகக் கூறி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழகத்தின் தென் மாவட்ட பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அணையில் 142 அடி வரை நீர் தேக்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், பலப்படுத்தும் பணிகள் முடிந்த பின் 152 அடி வரை உயர்த்தலாம் என முன்பே உத்தரவிட்டிருந்ததாகவும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அணை மற்றும் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக இயந்திரங்களை கொண்டு செல்ல வசதியாக, கேரள வனப்பகுதியில் சில மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மரவெட்டுக்கு கேரள அரசு இதுவரை அனுமதி வழங்காமல் காலம் கடத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், அணையின் கண்காணிப்பு குழு வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பூச்சு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காமல் கேரளா தடையிடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பராமரிப்புக்கு அவசியமான வல்லக்கடவு அணை சாலையை சீரமைக்க தமிழக அரசு ரூ.87.64 லட்சம் நிதியை பல மாதங்களுக்கு முன்பே வழங்கியபோதும், சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையின் கீழ்ப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்காக கேட்கப்பட்ட முக்கிய தரவுகள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு தொழில்நுட்பத் தரவுகளையும் கேரளா வழங்கவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. எனவே, பலப்படுத்தும் பணிகள் தாமதமின்றி நடைபெற கேரள வனப்பகுதியில் மரங்களை வெட்ட அனுமதி வழங்குமாறு கேரள அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.





