வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் பல கட்டமாக நடைபெற்று வந்தாலும், போர் நிறுத்தம் ஏற்படாத நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்க கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் கடற்படையால் ஆபத்து நேரிடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா 20 போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாக செய்தி கூறுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் தொடர்கிறது.

ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா “முழுக் கட்டுப்பாடு” கொண்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க கடற்படையை “எஃகுச் சுவர்” என அனைவரும் அழைப்பதாக கூறிய அவர், இதை எதிர்த்து ஈரான் எதுவும் செய்ய முடியாது என்றும் வாதிட்டார்.

மேலும், ஈரானின் ராணுவ திறன் மற்றும் அந்நாட்டின் நிலைமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, ஈரான் செயலில் எதுவும் இல்லாமல் வாய்சவடால் மட்டுமே விடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தூதரக முயற்சிகள் தொடர்ந்தாலும், முக்கியமான இந்தக் கடல்வழியைச் சுற்றிய சூழல் இன்னும் பதற்றமாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.