சென்னை: நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோவில் அரிய வகை ‘லார் கிப்பன்’ குரங்கு இடம்பெற்றதைத் தொடர்ந்து, வனத்துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த வகை குரங்கை வீடுகளில் வளர்க்க தடை இருப்பதால், அது எவ்வாறு வைத்திருந்தது என்ற கேள்விகள் எழுந்தன.
விசாரணையில், அந்த வீடியோ விக்ரமின் உறவினரான தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனுடன் தொடர்புடைய பண்ணை வீட்டில் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீட்டுக்கு சென்ற வனத்துறை குழுவுக்கு, அங்கு ‘லார் கிப்பன்’ குரங்கு இல்லை என்பது தெரிய வந்தது.
தொழிலதிபர் தரப்பில், அந்த குரங்கை ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதனிடம் திருப்பி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் கேசவநாதனின் பண்ணை வீட்டில் விசாரணை நடத்தினர். அவர் மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் என்பவரிடமிருந்து சில ஆண்டுகளுக்கு முன் மூன்று குரங்குகளை வாங்கியதாகவும், அதில் ஒன்று இறந்துவிட்டதாகவும், தற்போது இரண்டு மட்டும் இருப்பதாகவும் தெரிய வந்தது. குரங்குகளை வைத்திருப்பதற்கான சான்றிதழ் எதுவும் அவரிடம் இல்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து குரங்குகளை பறிமுதல் செய்து வண்டலூரில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மணிப்பூரைச் சேர்ந்த விற்பனையாளர் குறித்த விவரங்களை முதலில் உறுதிப்படுத்துமாறு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதால், பறிமுதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாமதத்தை வன உயிரின ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். தடை செய்யப்பட்ட உயிரினத்தை ஆவணமின்றி வைத்தல், காட்சிப்படுத்தல், இடமாற்றம் போன்றவற்றுக்கு வன உயிரினப் பாதுகாவலரின் அனுமதி அவசியம் என்ற நிலையில், விதிமீறல்களுக்கு உடனடி நடவடிக்கை இல்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த வனத்துறை உயரதிகாரி ஒருவர், லைகுராமிடம் ஆவணங்கள் உள்ளதா என்பதை விசாரிக்க உள்ளதாகவும், 2021க்கு முன் கொண்டு வரப்பட்டிருந்தால் பிரமான பத்திரம் பெற்று விவகாரத்தை முடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்; புதிய விதிகள் 2021க்கு பின்னரே அமலுக்கு வந்தன என்றும் அவர் கூறினார்.





