மதுரை: அண்ணாமலையின் புதிய அமைப்பு ‘வீ தி லீடர்ஸ்’-இல் உள்ள இளைஞர்கள் ஒரு பகுதி, அவர் முன்பு காட்டிய அதிரடி அரசியல் பாணியை இப்போது கைவிட்டதாகக் கூறி விரக்தியில் இருப்பதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பா.ஜ.க.வில் இருந்து விலகிய பின் அண்ணாமலை இந்த அமைப்பை தொடங்கினார். பல்வேறு தரப்பினரும் இணைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், முதற்கட்டமாக பொள்ளாச்சியில் மாநாடு நடத்தப்பட்டது.

அடுத்ததாக தூத்துக்குடியில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான திட்டமிடல் ஆலோசனைகளில் பா.ஜ.க.வில் இருந்து வந்தவர்கள் மற்றும் சீனியர்கள் அதிகம் பங்கேற்கிறார்கள்; இளைஞர்கள் அதிகம் காணப்படவில்லை என நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதனால், அண்ணாமலை மீது இருந்த ஈர்ப்பால் அமைப்பில் சேர்ந்த இளைஞர்கள் தங்களை புறக்கணிக்கப்படுவதாக நினைத்து ஆதங்கம் கொள்கிறார்கள். பலர் மவுனமாகி விட்டதாகவும், சிலர் செல்போனில் ‘டி.பி.’யை கூட மாற்றியுள்ளதாகவும், இன்னும் சிலர் வெளியேறும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.க.வில் இருந்தபோது தினமும் அனல் பறக்கும் பேட்டிகளுடன் அதிரடி அரசியல் செய்த அண்ணாமலை இப்போது காணப்படவில்லை என்ற குறையும், இளைஞர்களின் ஏமாற்றத்தை அதிகரித்துள்ளதாக நிர்வாகிகள் புலம்புகின்றனர்.