தமிழகத்தின் 2026–27 மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது நபர் எம்.பி.பி.எஸ். இடம் பெற்றுள்ளார். நீட் நுழைவுத் தேர்வு வந்ததால்தான் நீண்டநாள் கனவு நிறைவேறியது என அவர் கூறினார்.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 7,157 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,383 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இந்த கல்வியாண்டில் சேர 72,627 பேர் விண்ணப்பித்த நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியான பிறகு கலந்தாய்வு தொடங்கியது.
சிறப்பு பிரிவுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு தொடர்பான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விளையாட்டு பிரிவில் 280 பேர் விண்ணப்பித்த நிலையில் 13 எம்.பி.பி.எஸ். மற்றும் 2 பி.டி.எஸ். இடங்கள் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 224 இடங்கள் இருந்தும் 108 பேர் மட்டுமே விண்ணப்பித்ததால், விண்ணப்பித்த அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த மாற்றுத்திறனாளிகள் பிரிவில், சுரேஷ்குமார் எம்.பி.பி.எஸ். சேர்க்கை ஆணையை பெற்றார். தமிழ் வழியில் படித்ததாகவும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் கூறிய அவர், நீட் தேர்வில் 192 மதிப்பெண் பெற்று இடம் பிடித்ததாக தெரிவித்தார்.
மேலும், குடும்பத்தை கவனித்துக் கொள்வதாக மனைவி உறுதி அளித்ததாகவும், மகன்களின் கல்வி தேவைகளை முன்னதாகவே திட்டமிட்டு இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். சொந்த மாவட்டத்திலேயே மருத்துவம் படிப்பதால் நிச்சயம் மருத்துவராவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.





