புதுடில்லி: தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம், பலத்த காற்று மற்றும் மழை காரணமாக நடுவானில் கடுமையாக குலுங்கி, சில வினாடிகளில் சுமார் 300 அடி கீழே சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.
ஏர்பஸ் நிறுவனத்தின் முதற்கட்ட விசாரணை தகவலின்படி, அந்த சரிவின்போது விமானத்தின் முக்கிய கட்டுப்பாடுகள் சுமார் 4 வினாடிகள் முழுமையாக செயலிழந்ததாக கூறப்படுகிறது. மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் மற்றும் ஏர்பஸ் நிறுவனம் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. பிளாக் பாக்ஸ் மற்றும் டிஜிட்டல் விமான தரவு பதிவேட்டை ஆய்வு செய்ததில் தொழில்நுட்பக் கோளாறு உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, விமானிகளை போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக சோதனை செய்ததாகவும், முதற்கட்ட சோதனையில் தலைமை விமானி போதைப்பொருள் உட்கொண்டதாக முடிவு வந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணை மற்றும் பரிசோதனைகள் முடியும் வரை இரு விமானிகளும் பறப்புப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
விமானப் பாதுகாப்பு விதிகளை மேலும் வலுப்படுத்தவும், இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறும், விமானி சோதனை முடிவுகளும் தொடர்பாக கூடுதல் விசாரணைகள் தொடர்கின்றன.





