ராகுல் விமர்சனத்திற்கு பாஜ பதிலடி
சிம்லா: பிரதமர் நரேந்திர மோடியை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்கள் “தரம் தாழ்ந்தவை”, “அநாகரிகம்” மற்றும் “ஆணவம் நிறைந்தவை” என பாஜ எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் வெளியுறவுக் கொள்கை மற்றும் செயல்பாடுகளை ராகுல் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பதிலடி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அனுராக் தாகூர் தனது கருத்தில், ராகுல் காந்தியை மக்கள் பலமுறை நிராகரித்துள்ளதாக கூறி, தற்போது அவர் அவதூறு பரப்புவதில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். மேலும், வெளிநாட்டு பெண் தலைவரை குறித்து ராகுல் அநாகரிகமாக பேசியதாகவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்திலும் வெளியில் அரசியல் களத்திலும் ராகுல் தோல்வியடைந்துள்ளதாக கூறிய தாகூர், அவையில் பொருத்தமான விவாதம் நடைபெற அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். விவாதம் நடந்தபோதும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அவர் பேசவில்லை; மாற்றங்கள் குறித்து கருத்தும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை குறிவைத்து பயன்படுத்தப்பட்ட சொற்கள் ராகுலின் அவநம்பிக்கையும் விரக்தியையும் காட்டுகின்றன என்றும் அனுராக் தாகூர் தெரிவித்தார்.





