போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வீரேந்தர் சிங் பசோயாவை ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டறிந்து, அவர்களின் முழு வலையமைப்பையும் வேரறுக்கும் நடவடிக்கைகளை மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை போதைப்பொருள்களுக்கு எதிரான “பூஜ்ய சகிப்புத்தன்மை” கொள்கையில் புதிய மைல்கல்லாக இருப்பதாகவும், என்சிபி அதிகாரிகள் இந்த நாடு கடத்தலை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
எங்கு பதுங்கினாலும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இந்தியச் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் மீண்டும் நிரூபித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.





